திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகம்
தேசிய திறனாய்வுத் தேர்வு (NMMS) உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில், இந்த கல்வியாண்டு (2025–2026) முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி, ODR (One Time Registration) எனப்படும் ஒரு முறைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கும் 8-ம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், NMMS எனப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
தமிழகத்தில் இத்தேர்வை மத்திய அரசின் சார்பில் மாநில அரசு தேர்வுத் துறை நடத்துகிறது. இந்நிலையில், 2025–2026 கல்வியாண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு உதவித்தொகைக்கான ஆன்லைன் பதிவில் புதிய நடைமுறை பின்பற்றப்படும் என மத்திய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பள்ளிக் கல்வித்துறை, தமிழகத்தை உள்ளடக்கிய அனைத்து மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறை செயலர்களுக்குப் பகிர்ந்துள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
2025–2026 கல்வியாண்டுக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 2-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) உதவித்தொகைக்காக பதிவுசெய்யும் போது, ODR (ஒருமுறை பதிவு) அவசியம். இதற்காக மாணவர்களின் செல்பேசி எண் தேவைப்படும். ஆதார் அடிப்படையிலான e-KYC செய்யும் போது, ODR ஐடி வழங்கப்படும்.
Comments