தேசிய போட்டிக்கு மாணவர் தேர்வு : விருதை பள்ளியில் பாராட்டு விழா
விருத்தாசலத்தில் தேசிய அளவிலான பேஸ்பால் போட்டிக்கு தேர்வு — மாணவருக்கு பாராட்டு
விருத்தாசலம்: தேசிய அளவிலான பேஸ்பால் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவருக்கு விருத்தாசலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விருத்தாசலம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 2025–26 கல்வியாண்டிற்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், விருத்தாசலம் குறுவட்டத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் வாலிபால் மற்றும் பீச் வாலிபால் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். பின்னர், கடலூர் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவர் ஹரிஹரன், முதலிடம் பெற்று தமிழக அணிக்கு தேர்வானார்.
ஹரிஹரன், தமிழக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்த தேர்வு போட்டியிலும் சிறந்து விளங்கி, தேசிய அளவிலான பேஸ்பால் போட்டிக்குத் தேர்வானார். அவர் விரைவில் டில்லியில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதையொட்டி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தலைமை ஆசிரியர் வினோத்குமார், ஹரிஹரனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராணி, விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவரை வாழ்த்தினர்.
Comments